- Views 332
- Likes
ஏப்ரல் 29ம் தேதி, சனிக்கிழமை மாலை 6.00 மணிக்குத் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகமும் கியட் ஹாங் சமூகமன்றமும் இணைந்து தமிழ் மொழி மாதத்தின் அங்கமாகப் படைத்த இரு சுற்றுப் பேச்சாளர்களுக்கானப் போட்டித் தேர்வுகளுக்குப் பின் இறுதிச்சுற்றை எட்டிப் பட்டிமன்றத்தில் பேசிய நான்கு மாணவர்களை அங்கமாகக் கொண்டு நடைபெற்ற சிறப்புப் பட்டிமன்றம் வெற்றிகரமானதாக இருந்ததை திரளாக வந்திருந்த மக்கள் உறுதிசெய்தனர்!
நிகழ்ச்சியை திருமதி சுவர்ணலதா ஆவுடையப்பன் மிக அழகாக நெறியாள்கை செய்தார்.
நேர்த்தியாகத்
தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடிய அக்ஷயினி தனபாலன் மற்றும் பரதநாட்டியம் ஆடிய அமிழ்தினி உதயகுமார் ஆகியோருக்கு நமது பாராட்டுக்கள்.
திரு அருமைச்சந்திரன் PBM வரவேற்புரை நிகழ்த்தினார்.
சுவா சூ காங் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்
திரு சுல்கர்னைன் அப்துல் ரஹிம் விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
நமது அருமையான மாணவர்கள் தக்க்ஷினி முத்துகுமார் மற்றும் முத்து சுவேதா இருவரும் ‘திரைப்படப் பாடல்களின் அழகு இசையிலே” என்ற அணியில்
நடிகர். திரு. பாண்டியராஜன் அவர்களுடன் இணைந்து சிறப்பான வாதங்களை முன்னெடுத்துப் பேசிப் பலத்தக் கைதட்டல்களைப் பெற்றனர்.
மேலும் நமது அருமையான மாணவப் பேச்சாளர்கள் மகிஷா முத்துகுமார் மற்றும் அஸ்வின் கணேசன் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் பேச்சாளர் திருமதி. அனிதா சம்பத் அவர்களுடன் இணைந்து
‘திரைப்படப் பாடல்களின் அழகு பொருளிலே” என்று பல நல்ல கருத்துக்களை மேற்கோடிட்டுக் காட்டித் தங்கள் தரப்பு வாதங்களை முன்னிறுத்தி வாதிட்டு மக்கள் அனைவரின் கவனத்தையும் ரசனையையும் ஈர்த்தனர்.
இவர்களுக்கு நடுவராக இந்தியாவிலிருந்து வந்திருந்த முனைவர் திரு. நெல்லை பி. சுப்பையா அவர்கள் பட்டிமன்ற நடுவராக மிகச் சிறப்பான முறையில் பல நல்ல சுவையான கருத்துக்களை நகைச்சுவையுடனும் விளக்கமாகவும் தலைப்பிற்கு வலுசேர்க்கும் விதமாகவும் பேசி முடிவில் திரைப்படப் பாடலில் அழகு பொருளைவிட இசையே எனத் தீர்ப்பினை அளித்தார்.
TPKK ன் தலைவர் திரு. Arumai Chandran, PBM மற்றும் இவ்விழாக் குழுவிற்குத் தலைமை வகித்த திருமதி நபீலா நஸ்ரின் இருவரும் இந்த மாபெரும் நிகழ்ச்சியை கியாட் ஹாங் சமூக மன்ற இந்திய நற்பணிக் குழுவினருடனும் மற்றும் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகக் குழுவினருடனும் இணைந்து வெற்றிகரமாக நடத்திட பெரும் முயற்சிகளுடன் ஏற்பாடு செய்து சிறப்பாக நிகழ்த்திக்காட்டினர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த
தமிழார்வலர்கள் பலரும் நிகழ்வினை ரசித்துக் கேட்டு, கண்டு, களித்துப் பாராட்டிச்சென்றனர்.
இவ்விழாவிற்குப் பொருளுதவி நல்கிய ஆதரவாளர்கள், வர்த்தக நிறுவனங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் மக்கள்
அனைவருக்கும் மிக்க நன்றி!
தமிழ் மொழி விழாப் பட்டிமன்ற ஏற்பாட்டுக் குழுவினர்