- Views 102
- Likes
டாக்டர் அப்துல் கலாம் அவர்களின்
93வது பிறந்தநாள் விழா
அப்துல்கலாம் இலட்சியக் கழகமும் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகமும்
இணைந்து டாக்டர் அப்துல் கலாமின் 93வது பிறந்தநாளை
மிகச்சிறப்பாகக் கொண்டாடியது
12 அக். 2024 மாலை 6 மணியளவில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய
அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக
இணைப்பேராசிரியர், டாக்டர் முஹம்மாட் ஃபைசால் இப்ராஹிம்
(உள்துறை மற்றும் தேசிய வளர்ச்சி துணை அமைச்சர்) கலந்துகொண்டு
சிறப்பித்தார்கள்.
6 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்து காணொளிக்கு அக்ஷைனி
தனபாலன் பாட தொடர்ந்து ஸ்ரீரஜாவின் பாரம்பரிய நடனம்
இடம்பெற்றது. அடுத்து அப்துல் கலாம் இலட்சியக் கழகத்தின் தலைவர்
திரு அமீரலி வரவேற்புரை வழங்கினார். டாக்டர் அப்துல்கலாமின்
மாண்புகளை எடுத்துச்சொல்லி சிறப்பு விருந்தினரை இந்த நிகழ்ச்சிக்கு
வரவேற்பதில் பெருமையடைவதாகக் குறிப்பிட்டார். அடுத்து சிறப்பு
விருந்தினருக்கு மரியாதை செய்யப்பட்டபின் அமைச்சர் பேசினார்.
டாக்டர் அப்துல் கலாமுக்காக எடுக்கப்படும் இந்த விழாவில்
கலந்துகொள்வதில் பெருமையடைவதாகக் குறிப்பிட்டார்.
வாழ்நாளைச் சாதனையாளர் விருது யாருக்கு என்பதை திரு
அருமைச்சந்திரன் PBM அறிவிக்க, சிறப்பு விருந்தினர் திரு
மா.அன்பழகனுக்கு வாழ்நாள் சாதனைக்கான விருதையும்,
சான்றிதழையும் வழங்கினார். தொடர்ந்து திரு பரசு கல்யாண் அவர்கள் 11
மாணவர்களுடன், டாக்டர் அப்துல்கலாம் பற்றி மா. அன்பழகன் எழுதிய
பாடலை மிக உருக்கமாகப் பாடினார்.
அடுத்து இடம்பெற்றது பட்டிமன்றம். டாக்டர் அப்துல் கலாமிடம்
20ஆண்டுகள் அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றிய டாக்டர்
பொன்ராஜ் அவர்கள் தலைமையில் இப்பட்டிமன்றம் இடம்பெற்றது.
அப்துல்கலாமின் வெற்றிக்குக் காரணம் மதிநுட்பமா, மனிதநேயமா
என்பதே தலைப்பு. மதிநுட்பம் அணியில் திருமதி அகிலாமுத்து, திருமதி
சக்திதேவி தமிழ்ச்செல்வன், செல்வி மோஹன் ஹரிவர்த்னி ஆகியோரும்,
மனிதநேயமே என்ற அணியில் திரு ஜோதி. மாணிக்கவாசகம், திருமதி
வானதிபிரகாஷ், செல்வி முத்துசுவேதா ஆகியோரும் மிகச் சிறப்பாக
வாதிட்டனர்.
டாக்டர் அப்துல் கலாமோடு பழகிய காலங்களில் நடந்த நிகழ்வுகளை
டாக்டர் பொன்ராஜ் சுவையாகப் பகிர்ந்துகொண்டு தீர்ப்பை வழங்கினார்.
மதிநுட்பமே என்பது உண்மைதான் என்றாலும், மனிதநேயம் அல்லாத
மதிநுட்பம் வெற்றியைத் தராது. ஆக மதிநுட்பத்திற்கும் மேலாக அவரிடம்
இருந்த மனிதநேயமே அவருடைய வெற்றிக்குக் காரணம் என்று
தீர்ப்புரைத்தார். இறுதி நிகழ்வாக அப்துல்கலாம் இலட்சியக் கழகத்தின்
செயலாளர் திரு ஜான் ராமமூர்த்தி நன்றிசொல்ல, நிகழ்ச்சி இனிதே
முடிந்தது, திருமதி அன்னபூரணி கார்த்திகேயன் நிகழ்ச்சியை
தங்குதடையின்றி மிகச்சிறப்பாக நெறிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
செய்தி; தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்.