- Views 1339
- Likes
தேசிய தின விழாவின் ஒரு பகுதியாக தமிழ்ப் பட்டி மன்றக் கலைக் கழகம் லம்சூன் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு மற்றும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டி ஒன்றை இம்மாதம் 6ஆம் தேதி உட்லண்ட்ஸ் நூலக அரங்கில் ஏற்பாடு செய்திருந்தது. மாலை 4 மணிக்கு பதிவுகள் தொடங்கப்பட்டன. ஏற்கனவே பதிவு செய்துகொண்ட 250 மாணவர்களும் வந்திருந்தது குறிப்பிடத் தக்கது.
தொடக்கநிலை 1 மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் வார்த்தைகள் கொடுத்து தமிழில் மொழிபெயர்க்கச் சொல்லப்பட்டது. தொ.நிலை 2 மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் வாக்கியங்கள் தந்து தமிழில் மொழிபெயர்க்கச் சொல்லப்பட்டது. அதேபோல் தொ.நில் 3,4 மாணவர்களுக்கு சற்று கடினமான ஆங்கில வாக்கியங்கள் தரப்பட்டன. 250 பேர் பங்கு கொண்ட முதல் சுற்றில் மூன்று நிலைகளுக்கும் தனித்தனியாக 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மொத்தம் 60 மாணவர்களும் 2ஆம் சுற்றுக்குத் தகுதி பெற்றார்கள்.
இரண்டாம் சுற்று பார்வையாளர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. அந்த 20 மாணவர்களும் 10 அணிகளாகப் பிரிக்கப்பட்டார்கள். முதல் நிலையில் வந்த 3 அணிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அடுத்த 7 அணிகளுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டிகள் மாணவர்களுக்கு நடந்துகொண்டிருக்கும்போதே பெற்றோர்களுக்காக மாணவர்கள் பங்குபெற்ற ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியும் அரங்கேறியது. போட்டிகள் முதல் தளத்திலுள்ள நிகழ்ச்சி அறையிலும் பட்டிமன்றம் அடித்ததளத்திலுள்ள அரங்கத்திலும் நடத்தப்பட்டது. பட்டிமன்றத்திற்கான தலைப்பு மாணவர்கள் தமிழில் பேச தயங்குகிறார்களா? அல்லது விரும்புகிறார்களா? என்பதே ஆகும். முனைவர் ராஜி சீனிவாசன் நடுவராகப் பொறுப்பேற்றார். தயங்குகிறார்கள் என்ற அணியில் சூரியா, தர்ஷிணிகா, சிம்ருதா ஆகியோரும் விரும்புகிறார்கள் என்ற அணியில் பார்கவ், மிதுன், தாணு ஹரிணி ஆகியோரும் வாதாடினார்கள்.
தீர்ப்புக்கூறிய முனைவர் ராஜி சீனிவாசன் தமிழ் சரளமாகப் பேசும் பெற்றோர்களின் பிள்ளைகள் தமிழில் பேச விரும்புகிறார்கள் என்றும் வீட்டில் ஆங்கிலத்திலேயே பேசும் பெற்றோர்களின் பிள்ளைகள் பேசத் தயங்குகிறார்கள்.என்றும் தீர்ப்புரைத்தார். ஆக தயங்குகிறவர்களை விரும்புபவர்களாக மாற்றும் பொறுப்பு பெற்றோர்களிடம்தான் இருக்கிறது என்று பலந்த கைதட்டலுக்கிடையே கூறினார். மாணவர்களுக்கான பரிசுகளை தொழில்முனைவர் வள்ளல் ஜோதி மாணிக்கம் அவர்கள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சிக்கு கல்வி அமைச்சின் தமிழ்ப் பிரிவுன் உதவி இயக்கநர் திரு த.வேணுகோபால் அவர்கள் மாணவர்களின் திறமையை வெகுவாகப் பாராட்டினார். இதுபோன்ற ஒரு போட்டியை பாடத்திட்டத்திலே கூட வைக்கலாமா என்று தான் யோசிப்பதாக பலத்த கைதட்டலுக்கிடையே தெரிவித்தார். நிகழ்ச்சியில் அபிராமி பழநியப்பன் அவர்களும் குடும்பத்துடன் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்காக ஏராளமான தொண்டூழியர்கள் தேவைப்படடார்கள் அப்துல் கலாம் வேல்ட் விஷன் உறுப்பினர்களும் லம்சூன் சமூக மன்ற இந்திய நற்பபணிச் செயற்குழு மற்றும் தமிழ்ப் பட்டிமன்றக் கழக உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிய பெரிதும் உதவினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.